Kala Bhairavar Pooja

பெளர்ணமி

பெளர்ணமி தியான பிரார்த்தனை ( பொது நலச் சேவை)

அருட்சிவஞான பீடத்தில் ஒவ்வொரு பவுர்ணமிதோறும் நள்ளிரவு தியானமும், வேள்வியும் செய்வது வழக்கம்.

மின்னஞ்சல் மூலம் தங்களின் கோரிக்கையை சமர்ப்பிவர்களுக்கு ஒவ்வொரு பெளர்ணமி தினத்திலும் சித்தர்களிடமும், அருட்சிவமாகிய பரம்பொருளிடமும் அருட்சிவஞான பீடம் சார்பில் பிரார்த்தனை செய்கின்றோம்.

E-mail: saimeenan@gmail.com

இவ்வலைப்பூவில் பின்தொடர்பவராக சேர்ந்தவர்களுக்கு எனது அன்பார்ந்த நன்றியை தெரிவித்துக்‍கொள்கின்றேன்.

Thursday, February 24, 2011

சிவயோகசாரம் 16


சிவயோகசாரம் 15 ன் தொடர்ச்சி ...
அஜபாவின் நிலை

இந்த யோகத்திற்குரிய ஏகாந்த ஸ்தானத்தில் பத்மாசனமிட்டு உட்கார்ந்து அஷ்டகந்த தூபமிடவேண்டும். இந்த யோகத்திற்காக ஏற்படுத்திய அறையானது, மிக்க நலமாக இருக்க வேண்டும். தான் தனியேதான் இருக்க வேண்டும். இதில் சொல்லிய நான்கு காலங்களில் எந்தக் காலமாவது வைத்துக் கொண்டு அப்பியாசிக்க வேண்டும்.
இருநாசித்துவாரங்களிலிருந்து வெளியே வருகின்ற சுவாசத்தின் சத்தமாகிய "ஹம்" என்பதையும் உள்ளே போகின்ற சுவாசத்தின் சத்தமாகிய "ஸம்" ( சிலர் இதனை ‍"ஸோ" என்றும் கூறுவர்) என்பதையும் கண்டறிய வேண்டும். இந்த "ஹம்ஸம்" ( "ஸோஹம்") என்கிற சத்தத்தைக் கண்டறிந்தவன், இந்த அப்பியாசத்தில் முதற்படி தெரிந்தவன் ஆவான். இந்த அப்பியாசம் செய்பவர்கள் உலக ஆசையை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொள்ளவேண்டும். ஒரேயடியாக குறைக்க கூடாது.
ஏன் எனில், ஒரு வருட காலம் வரையில் மனக்கலக்கமும் பலவிதக் கவலையும் நேரிடும் என்பதால், நாளுக்கு நாள் கொஞ்ச கொஞ்சமாக நீக்க வேண்டியது. சாதகர் கூடிய அளவு மனதை ஸ்திரப்படுத்த வேண்டும்.
இதே மாதிரியாக தன்னுடைய சுவாசத்தைக் குறித்து, அதனால் உண்டாகும் "ஹம்ஸம்" என்ற சத்தத்தை கண்டறிய வேண்டும். இப்படி அப்பியாசித்து மூன்று நாடிகளின் குணத்தையும் "ஹம்ஸம்" என்ற சத்தத்தையும் கண்டறிந்தவுடன் தத்துவத்தை அறிய வேண்டியது.
மூன்று நாடிகளைக் கண்டறியாமல், பஞ்ச தத்துவத்தை ஆரம்பிக்கக் கூடாது. இந்த யோகம், அப்பியசித்து ஜீரணசக்தியை உணர்ந்து தேகத்தைப் பலப்படுத்தவேண்டும். அதாவது அரிசி, கோதுமை, பச்சைப்பயிறு, துவரை உளுந்து, கம்பு, கேழ்வரகு, நெய், பால், தயிர், மோர் முதலியவற்றை உபயோகிக்க வேண்டும். இந்த யோகி அரை வயிறு அன்னமும், கால் வயிறு ஜலமும் சாப்பிட வேண்டும். ஏன் எனில், உள் வாயு மற்ற ஒரு பாகத்தில் சஞ்சரிக்க வேண்டுமென்று உணர்க.
புளிப்பு, இனிப்பு, உவர்ப்பு, கார்ப்பு முதலியவை அதிகமாகச் சேர்க்கக்கூடாது. இத்தன்மைப்பட்ட யோகி சன்னியாசியாக வேண்டியதில்லை. எல்லாக் குடும்பத்தினரும், செல்வந்தர்களும், ஏழைகளும், ஜாதி பேத, நிற வித்தியாசம் பார்க்க வேண்டியதில்லை. எவர்கள் திரிகரண சுத்தமாக இந்த யோகத்தைச் செய்வார்களோ அவர்களுக்கு இவை சித்திக்கும் என்பது நிச்சயம்.
ஒருவன் பதினெட்டு வயதில் இந்த அப்பியாசித்தானானால் ஐம்பதாவது வயதில் அந்தக் கேசரி முத்திரையை அடைவான். (செய்யும் பயிற்சியினைப் பொறுத்து காலங்கள் சாதகருக்கு சாதகர் வேறுபடும்) இத்தன்மையான யோகி மது, மாமிசங்களைக் கண்டிப்பாய் நீக்கியிருப்பதன்றி, ராஜஸ, தாமஸ குணங்களற்று, தத்துவத்தைக் கொண்டு சுறுசுறுப்பாக அப்பியசித்து, அதிதீவிரபக்குவமாய் வாழ்வான்.
 
தொடரும்...

Tuesday, February 1, 2011

பர்வத மலைப் பயணம்



முந்தைய பர்வதமலை குறித்தான பதிவு நான் எதேச்சையாக பதிந்தது.
அதன்பின்னர் பர்வதமலை பயணம் குறித்து விளக்கங்கள் கேட்டு  சில மின்னஞ்சல் வரப்பெற்றதில் உருவானது இந்த பயணக்கட்டுரை. 
மின்னஞ்சல் அனுப்பிய எனது அன்புக்குரிய ஸ்ரீலங்கா (டென்மார்க்)அன்பருக்கும் மற்றுமுள்ள அன்பருக்கும் எனது அன்பார்ந்த நன்றிகள்.
( நீங்கள் தூண்டிவிட்டால் சுடர்விட நான் தயார்)

பர்வதமலை

அம்பாளின் அருளைப்போன்றே மிக வசீகரமான பெயரைக்கொண்ட இந்த மலையைப்பற்றி நான்  கேள்விப்பட்ட வருடம் 1994. அப்போது என்னுடைய வயது 21. வசித்த இடம் சென்னை பழைய வண்ணாரப்பேட்டை ஜி.. ரோடு. வண்ணாரப்பேட்டையிலிருந்து பர்வதமலை யாத்திரைக்குழு என்ற அமைப்பிலிருந்து மாதாமாதம் பர்வதமலைக்கு சென்று வருவார்கள். அவர்களிடம் பர்வதமலையைப்பற்றிய விபரங்களை கேட்டுத் தெரிந்து கொண்டதுண்டு. நானும் கொல்லி மலை, சுருளிமலை, வள்ளி மலை, சதுரகிரி மலை,  வெள்ளியங்கிரி மலை, சேலம் அருகில் உள்ள சித்தர் மலையினை முன்பே கேள்விபட்டிருந்தேன். ஆனால் பர்வதமலையைப்பற்றியும் அதன் அருளாற்றலைப் பற்றியும் அச்சமயம்தான் நான் அறிந்தேன். கோரக்கர் அருளிய "கோரக்கர் மலைவாகடம்"த்தில் பல்வேறு மலைகளைப்பற்றியும் பல்வேறு மூலிகைகளைப்பற்றியும் குறிப்புகள் உள்ளது. (இந்தநூல் அப்போது என்னிடம் இருந்தது). இந்த பர்வதமலையை நான் கேள்விப்பட்ட பிறகு சுருளிமலை, கொல்லிமலை, வள்ளிமலை போன்ற மலைத்தளங்களுக்கு பலமுறை சென்று வந்துவிட்டேன்.
ஆனால் 15 வருடங்களுக்கு பிறகு சென்ற ஆண்டுதான் பரம்பொருளின் அருளால் சென்று வரமுடிந்தது. 
எந்த ஒரு மலையாயினும் பரம்பொருளின் அருளாலும், சித்தர்களின் ஆசியாலும், திவ்யமான சித்தர்கள் வாசம் செய்யும் மலையில் நமது விதிப்பயன்படிதான் நாம் காலடி எடுத்து வைக்கமுடியும். நாம் நினைத்ததும் எந்த மலைக்கும் சர்வ சாதாரணமாக சென்று வந்து விட முடியாது. ( சிலர் சுற்றுலாப் பயணமாக வேண்டுமானால் சென்று வந்துவிடலாம் அது வேறு.) 
சென்னையிலிருந்து எனது பூர்வீகமான வடலூருக்கு வந்தவுடன் சென்னையிலுள்ள ஆன்மீக நண்பர்களின் தொடர்பு சற்று காலம் இல்லாமல் இருந்தது. வடலூர் வந்தவுடன் இங்கும் புதியதாக ஒரு ஆன்மீக நண்பர்கள் வட்டம் ஆரம்பமானது. மூன்று வருடங்களுக்கு முன் சிதம்பரம் நடராஜப் பெருமானின் அருளாலும், நான் பூசித்து வரும் சித்தி விநாயகர் அருளாலும், சித்தர்களின் ஆசியாலும் அருட்சிவஞான பீடம் என்ற அமைப்பு நிறுவப்பட்டு அதன் முதல் ஆன்மீகப் பயணமாக பஞ்சபூத ஸ்தலங்களுள் ஒன்றான திருவானைக்கா (நீர்), திருவரங்கம் (ஸ்ரீரங்கம்), திருச்சி உச்சி பிள்ளையார்கோயில், பழனி ஆகிய ஸ்தலங்களுக்கு எனது அண்ணனை ( சித்தி மகன்) ஓட்டுநராகக் கொண்டு டூரிஸ்டர் வேனில் சென்று வந்தோம்.  இந்த பயணத்தின் போது பல்வேறு மலைப்பயணங்களைப்பற்றி பேசிக்கொண்டு வந்த போது எனது அண்ணன் ஏதேச்சையாக '..முருகா நீ பர்வதமலை போயிருக்கீயா?'
என்று கேட்டார். எனது பதில் '..இல்லண்ணா இந்தமலைக்கு போக மட்டும் அவ்வளவு சீக்கிரம் வாய்ப்பு வரமாட்டேங்குது '. என்றேன். அவர் சிரித்தார். ஏண்ணா சிரிக்கிறீங்க என்றதற்கு அவரின் பதில்.. '..நீ பல மலைக்கு போயிருக்க. இந்தமலைக்கு போகலை. நாங்க வருடத்திற்கு ஐந்து ஆறுமுறை பர்வத மலைக்கு சென்று வருகிறோம். போனமாதம்தான் போய்விட்டு வந்தோம் என்றார். சரி நான் அடுத்த முறை பர்வத மலைக்கு செல்லும்போது உனக்கு தகவல் சொல்றேன் என்றார்.
அவரும் அவருடன் பணியாற்றும் மற்ற வேன் ஓட்டுநர்களும் கடலூரிலிருந்து நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஒரு வேனை எடுத்துக்கொண்டு  பக்கத்து ஊருக்கு போயிட்டு வருவது போல் ஒட்டுமொத்த வேன் ஓட்டுநர்களின் இஷ்ட தெய்வமான பர்வதமலை மல்லிகார்ஜூனேஸ்வரரை மலையேறி தரிசித்துவிட்டு வந்துவிடுவார்கள்.
முன்பு அவர் கூறியதைப் போல் ஒருமாதம் கழித்து போனில் 'நாளை பர்வதமலை போகிறோம் வா' என்றார். இந்த சமயத்தில் எனக்கு வைரஸ் சுரம் வந்து ஒரு மாதமாக படுத்த படுக்கையாக இருந்தேன். சாயந்திரம் ஆச்சுன்னா சும்மா குளிர்சுரம் வந்து ஆட்டு ஆட்டுன்னு ஆட்டும். என்னடா இது சோதனை இந்த நேரத்தில இவர் கூப்பிடுறார்னு நினைச்சு எனது நிலைமைய அவரிடம் சொல்லிட்டு நான் வரலைண்ணா என்று கூறிவிட்டேன்.
வாய்தான் வரலைன்னு சொல்லிச்சு. மனம் " நீ போக நினைச்ச பர்வதமலைக்கு போக பதினைந்து வருடம் கழித்து அற்புதமான வாய்ப்பு வருது போறியா? இல்லையா?" ன்னு  கிடந்து அலறுது. ஒரு நாள் முழுவதும் எனது உடல்நிலையை குறித்து இந்த மனப்போராட்டம். இறுதியாக புறப்படும் நாள் அன்று மாலை 4 மணிக்கு எனது அண்ணனுக்கு போன் செய்து நானும் இன்னொரு தம்பியும் வர்றோம் வேனில் சீட் இருக்கான்னு கேட்டு, சீட் இருக்கு என்ற செய்தி கேட்டு மனம் குதியாலம் போட்டது. இன்னும் கொஞ்ச நேரத்துல பர்வதமலைக்கு புறப்படப் போறாம்ன்ற சந்தோஷத்துல சுரம் அடிக்கறது கூட பெரியதாகப் படல எனக்கு. உடனே எனது ஒன்றுவிட்ட தம்பி அருணாசலத்தை துணைக்கு அழைத்துக்கொண்டு வடலூரிலிருந்து புறப்பட்டு ஒரு மணி நேரத்தில் கடலூரில் வேன் முன்னர் ஆஜராகிட்டோம்.
இனி நாங்கள் பர்வதமலைக்கு சென்ற விபரத்தை இங்கு பார்ப்போம்.
கடலூரிலிருந்து எனது அண்ணனுடன் வேன் மூலம் அவர்களுடைய நண்பர்களுடன் (12 நபர்கள்) இரவு 9.30 மணியளவில் புறப்பட்டோம். திருவண்ணாமலை, கடலாடி வழியாக பர்வதமலை அடிவாரத்தில் உள்ள ஒரு ஆசிரமத்தை இரவு 1 மணியளவில் அடைந்தோம். அடிக்கடி செல்லும் விபரம் தெரிந்தோர் மட்டும் இந்த வழியில் செல்வர்.( ெதன்மாதி மங்கலம் வழியாக பிரதான படிக்கட்டு பாதை உண்டு).
நாங்கள் சென்றது விசேஷ நாள் அல்ல.
வேனை விட்டு இரங்கியவுடன் தூங்கிக் கொண்டிருந்த ஒரு கடைக்கார பெண்மணியை எழுப்பி அந்த நேரத்திலும் தேநீர் போடச்சொல்லி வாங்கிக் குடித்தவுடன் தூக்க கலக்கம் ஓடிப்போச்சு.
அடுத்தது அண்ணனிடம் என்னவென்று விசாரித்தால் குளித்துவிட்டுத்தான் மலையேற வேண்டும். நாங்க குளிக்கப் போறாம். நீ வண்டியில இரு சுரம் விட்டு விட்டு அடிக்கறதால குளிக்க வேண்டாம் என்றார்.
எனக்கு மனம் கேட்கவில்லை. ஒரு புனிதமான மலையில் இருக்கும் சர்வேஸ்வரனை தரிசிக்க செல்லும் போது சுத்தமாக செல்லவேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது. மேலும் நான் லிங்கதாரணம் (ஆத்ம லிங்கம் அணிந்திருப்பது)கொண்டவனென்பதால் சுத்தபத்தமாக பூஜை செய்வது தினசரி கடமைகளில் ஒன்று.
அண்ணனிடம் நானும் குளிக்க வர்றேன் என்று கூறிவிட்டு அவருடன் ஆசிரமத்திற்கு பின்புறம் சென்றேன்.
அங்கே குறைவாக ஒரு பைப்பில் வந்த தண்ணீரில் ஆளுக்கு ஒரு பக்கெட் வீதம் பிடித்து (ஊத்திக்கொண்டு)குளித்து விட்டு வந்து மறுபடியும் ஒரு டீயடிச்சிட்டு, தண்ணீர்பாக்கெட், பிஸ்கட் இன்னபிற பூஜை இத்யாதிகளுடன் டார்ச் லைட் சகிதம் இரவு 2 மணி அளவில் காலில் செருப்பு அணியாமல் (செருப்பு அணியக்கூடாது)மலையேற ஆரம்பித்தோம்.
அர்த்த ராத்திரியில நான் குளிச்ச இடம் ஒன்னு சபரிமலை. இரண்டாவது இந்த பர்வதமலைதான்.

கல்லும் முள்ளும் கொண்ட சற்று கடினமான பாதையாக இருந்தது.போகும்போதே ஒரு சூரை முள் காலில் குத்தி வலியேற்படுத்திவிட்டது. அத்துடன் நடக்கும்போது முள் குத்திய இடத்தில் பாறைக்கற்கள் படும்போது மேலும் வலி ஏற்பட்டது.
(இந்த சமயத்தில் நெஞ்சில் நான் அணிந்திருந்த ஆத்மலிங்கத்தை ஒரு கையில் பிடித்துக்கொண்டும், வலியின் வேகத்தைக் குறைக்க சிவநாமத்தை ஜெபித்துக்கொண்டும் சென்றதை இன்றளவும் என்னால் மறக்க முடியவில்லை. (எவர் ஒருவருக்கு சோதனைகள் நேருகின்றதோ அவர்கள் இறைவனின் நாமத்தை ஜெபித்துக்கொண்டே அச்சோதனையை வெல்லவேண்டும். இறைவன் அடியார்களிடம் விளையாடும் திருவிளையாட்டில் இதுவும் ஒன்று )    

(மலையேற மற்றுமொரு வழி உள்ளது அது அடிவாரத்திலிருந்து பாதிதூரம் வரை படிக்கட்டால் ஆனது. இந்த வழியும் நாங்கள் சென்ற வழியும் ஒரு இடத்தில் சங்கமித்து பின் இரண்டு வழியும் ஒன்றாக செல்லும். )

வழியில் சில இடங்களில் 10 நிமிடம் வீதம் ஓய்வெடுத்தோம். (அதிக நேரம் ஓய்வெடுத்தால் மீண்டும் கிளம்ப சற்று கஷ்டமாக இருக்கும்.)
கடைப்பாறை படியைத் தாண்டியவுடன் பின்னால் வருபவர்களுக்காக சிறிது நேரம் காத்திருந்தோம். அதிகாலை மணி 4.30 இருக்கும் மலையிலிருந்து கீழே பார்வையை செலுத்தினேன். நாங்கள் இருந்த இடத்திற்கும் கீழே  மலையைச்சுற்றி மேகங்கள் மிக வெண்மையாக, சந்திரனின் ஒளி பட்டு ரம்மியமாக காட்சி அளித்தது. ( சினிமாவில்
ஐஸ்புகை சூழ காட்டுப்படும் தேவலோகம் போன்று இருந்தது. விமானத்தில் போகும்போது இந்த காட்சி கிடைக்குமோ? என்னவோ? )
எனக்கு மட்டும் அப்ப றெக்கை இருந்ததுன்னா சும்மா ஒரு டைவ் அடிச்சி அந்த மேகக்கூட்டத்துல ஒரு பூந்து பூந்து ஆசை தீர விளையாடிட்டு வந்திருப்பேன். ( இந்த இடத்தில் சித்தர்களின் அட்டமா சித்தி என் நினைவுக்கு வந்தது. அவர்களுக்கு நான் நினைத்தது எல்லாம் சாத்தியம். எனக்கு நினைப்பு மட்டும்தான் அவர்களின் சித்தி நிலை எனக்கு இன்னும் வரவில்லை. அவர்களின் திருவடிகளைப்பற்றி அதற்கான பயிற்சிகளும், பூஜைகளும்,  பிரார்த்தனைகளும்தான் நடைபெற்று வருகின்றது. இறைவனின் திருவுள்ளம் எதுவோ?....)

திரும்பி வரும்போது இந்த ரம்மியமான மேகக்கூட்டத்தின் காட்சி இல்லை. வானம் துடைத்து வைத்தது போன்று இருந்தது.

விடியற்காலை 5 மணியளவில் மலைஉச்சியில் உள்ள கோயிலை அடைந்து விட்டோம். இங்கு ஒரு மணிநேரம் இருந்தோம். அந்த நேரத்தில் அங்குள்ள மல்லிகார்ஜூன சுவாமிக்கு ( லிங்கத்திற்கு)  நாங்களே பூஜைகள்  செய்தோம். ( நான் கோயில் ஐயர் என்பதாலும், முதன்முறையாக வந்ததாலும், என் அண்ணனின் நண்பர்கள் என்னையே லிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய சொன்னார்கள். இதிலும் அவர்களை விட வயதில் நான் மிகச் சிறியவன்.  கொண்டு போயிருந்த பாக்கெட் தண்ணீர், எண்ணெயைக்கொண்டு அபிஷேகம் செய்வித்தேன். எனக்கு பரம திருப்தி. பின்னர் லிங்கத்திற்கு அவரவர்கள் தத்தமது கரங்களாலே மலர் தூவி பூஜை செய்தோம். பின்னர் அம்மன் தரிசனம் செய்துவிட்டு, கோயிலில் இருந்தவரிடம் நன்கொடை கொடுத்துவிட்டு, விபூதி பிரசாதம் பெற்றுக்கொண்டோம்.
பின்னர் ஒரு இருபது நிமிடம் தியானம் செய்தோம்.
(மலையேறி வந்த வேகத்தில வேர்வை பெருகி சுரம் ஓடியே போய்விட்டது எனக்கு.) 
பின்னர் காலை 6 மணியளவில் மேலிருந்து கீழிறங்க ஆயத்தமானோம். மலை ஏறுவதைவிட கீழிறங்குவது சற்று கடினமாக இருந்தது. ஆளை கீழே தள்ளிவிடுவது போன்ற அபாய சறுக்கல் பாதை உண்டு. மலை ஏறும்போதைவிட இறங்கும்போது மிகுந்த கவனத்துடன் இறங்க வேண்டியதிருந்தது. ஏறும் போது குத்திய சூரை முள் விஷம் சற்று இறங்கி வலி குறைந்திருந்தது. இறங்கும் போது சற்று ஆசுவாசத்துடன் பொறுமையாக இறங்கினோம். ஆசிரம அடிவாரத்திற்கு 10 மணியளவில் வந்து சேர்ந்து விட்டோம்.

நெஞ்சில் நிறைந்த சந்தோஷத்துடன் திரும்பி அந்த மலையைப் பார்த்தேன்.
அருளாற்றலோடு ஒன்றுமே தெரியாததைப் போல் பூமித்தாயின் மடிமீது அமர்ந்திருந்தது அந்தப்  பர்வதமலை.


அங்கிருந்து புறப்பட்டு மதியம் 2 மணியளவில் இறைவன் அருளால் பர்வதமலை யாத்திரை முடிந்து கடலூருக்கு வந்து சேர்ந்து விட்டோம்.

குறிப்புகள் :
அடிவாரத்திலிருந்து மேலே சென்று பூஜை செய்துவிட்டு வர 8 மணி நேரம் போதுமானதாகும்.
சிலருக்கு அதற்கும் மேலேயே ஆனாலும் ஆகும்.
காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மலை ஏறி இறங்குவதை தவிர்த்தல் நலம்.

மலைமீது குடிக்க தண்ணீர் கூட கிடைக்காது.
(இயற்கை உபாதையை கழிக்க கூட இடம் இல்லை)
  
நாமே கீழிருந்து புறப்படும் போது தண்ணீர், குளுகோஸ் பவுடர், பிஸ்கட், பழம், பூஜைக்குண்டான பூ,  பழம், வெத்திலைபாக்கு அனைத்தும் வாங்கிச் செல்ல வேண்டும்.
இரவு நேரத்தில் மலை ஏற இறங்க நினைப்பவர்கள் டார்ச் லைட் கொண்டு செல்ல வேண்டும்.
மற்ற மலைகளைவிட ஏறுவதற்கு சற்று கடினமான மலை இது.
சில இடங்களில் இரும்பு ஏணியின் மூலம் ஏறிச்செல்லவேண்டும். சாதாரணமாக வீட்டில் உள்ள மாடிப்படியில் ஏறி இறங்க முடியாதவர்கள், மூட்டு வலி உள்ளவர்கள் இந்த மலைப்பயணத்தை தவிர்த்துவிட்டு அடிவாரத்தில் இருந்தே தரிசனம் செய்வது நல்லது. இருதய நோய் உள்ளவர்களும் இப்படியே தரிசனம் செய்வது நலம்.

எந்தவொரு மலைப்பயணமாக இருந்தாலும் முன்பின் சென்றவர்கள் கூட செல்வது நல்லது. 
அல்லது தெளிவாக புரோகிராம் சார்ட் செய்து கொண்டு பயணப்படுவது நலம்.
எல்லாவற்றிற்கும் மேலாக யாத்திரைக்கு அந்த மகேசனின் அருள் வேண்டி பிரார்த்தித்துவிட்டு சென்று வருவது நலம்.


பர்வதமலை குறித்து கூகுளில் சர்ச் செய்தால் நிறைய விபரம் கிடைக்கும்.
பார்வதமலைப்பயணம் குறித்து திருச்செங்கோடு பிரகாசம் என்பவர் விரிவாக அதிக புகைப்படங்களுடன் தமது வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளார். அவசியம் பார்க்க வேண்டுகிறேன்.

முகவரி இதோ :

மேற்படி பதிவின் கடைசியில் ஒன்பது  யூ டியூப் வீடியோ காட்சிகள் இணைத்துள்ளார். அதனையும் அவசியம் பாருங்கள். உங்களின் கருத்துக்களையும் அவருக்கு தெரிவியுங்கள்.

மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்........